கொரோனா நெருக்கடியிலும் உலகளவில் இதற்கு செலவிடும் தொகை அதிகரிப்பு!

கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும் கடந்த ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ல் மட்டும் உலக நாடுகள் மொத்தமாக இராணுவத்திற்காக 1981 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அதிகமாகும். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின்படி, கொரோனா நெருக்கடியால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

2020-ல் மொத்தம் செலவிடப்பட்டுள்ள 1981 பில்லியன் டொலர் தொகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

இருப்பினும் சிலி மற்றும் தென் கொரியா போன்ற சில நாடுகள், ராணுவத்திற்காக ஒதுக்கியிருந்த தொகையில் ஒருபகுதியை கொரோனா பேரிடருக்காக செலவிட்டுள்ளன.

பிரேசில் மற்றும் ரஷ்யா உட்பட இன்னும் சில நாடுகள் 2020ம் ஆண்டில் ராணுவத்திற்காக ஒதுக்கியிருந்த தொகையை விடக் குறைவாகவே செலவிட்டுள்ளனர்.

ஆனால் கடந்த ஓராண்டில் அமெரிக்கா மட்டும் ராணுவத்திற்காக சுமார் 778 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது.

அதாவது 2020ம் ஆண்டில் உலகளாவிய இராணுவ செலவினங்களில் 39 சதவீதத்தை அமெரிக்கா கொண்டிருந்தது. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.

அந்த நாடு 2020-ல் மொத்தம் 252 பில்லியன் டொலர் தொகையை ராணுவத்திற்காக செலவிட்டுள்ளது.

மட்டுமின்றி தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக சீனா ராணுவத்திற்கான தொகையை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!