மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய கொரோனா நோயாளிகள்: டெல்லியில் பரபரப்பு!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 100 கொரோனா நோயாளிகள், மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் ஆக்சிஜன் கையிருப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

விரைவில் சப்ளை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த மருத்துவர்கள், நேரம் கடக்க கடக்க பீதி அடைந்தனர். நோயாளிகளின் குடும்பத்தினரும் பதற்றம் அடைந்தனர். ஆக்சிஜன் சப்ளை செய்வதாக ஒப்புக் கொண்ட நிறுவனத்துக்கும், அரசுக்கும் உதவிகள் கேட்டு போன் அழைப்புகள் பறந்தன.

ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்தால் நோயாளிகள் சிலர் மூச்சு விட முடியாமல் திணறினர். மருத்துவமனைக்கு வெளியே இருந்த நோயாளிகளின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க, கடவுளிடம் வேண்டினர்.

அந்த நேரத்தில்தான், ஆக்சிஜன் ஏற்றிய டேங்கர் லொறி மருத்துவமனை உள்ள தெருவுக்குள் நுழைந்தது. இதை பார்த்ததும் கடவுள் தங்களுக்கு கண் திறந்து விட்டதாக மகிழ்ந்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு வந்த ஆக்சிஜன் டேங்கர் லொறியால், உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு காரணம், அங்கிருந்த சிறிய வாயில்தான்.

உடனடியாக, ஜேசிபி இயந்திரம் அவசரமாக அழைக்கப்பட்டது. அது வந்ததும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடித்து தள்ளப்பட்டு, டேங்கர் லொறி உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

ஆக்சிஜன் டேங்க் உடனடியாக நிரப்பப்பட்டு, நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால், அங்கு நிமிடத்துக்கு நிமிடம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதேபோல், கங்காராம் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 130 நோயாளிகள் மூச்சு திணறும் நிலை ஏற்பட்டது.

ஆனால், சிறிது நேரமானாலும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!