பிரேசில் பாடசாலையில் இளைஞன் வெறிச்செயல்: ரத்தவெள்ளத்தில் சரிந்த நால்வர்!

பிரேசிலில் சிறார் பாடசாலை ஒன்றில் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சிறார்கள் எனவும், இருவர் பாடசாலை ஊழியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. பிரேசிலின் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறார் பாடசாலை ஒன்றில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தி போன்ற கூரான ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதலை முன்னெடுத்த அந்த இளைஞர் பின்னர் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற ராணுவ பொலிசார், உடனடியாக அந்த இளைஞரை கைது செய்துள்ளதுடன், காயமடைந்த சிறார் ஒருவரையும் மரணமடைந்த நிலையில் காணப்பட்ட நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவருக்கு உளவியல் பிரச்சினைகள் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை என்று முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலை முன்னெடுத்த இளைஞர் பேரில் இதுவரை எந்த வழக்கும் இருந்ததில்லை எனவும், அவர் சிறார் பாடசாலைக்கு சென்றவரல்ல எனவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த இளைஞரின் பெற்றோர், தற்போது மருத்துவமனையில் அந்த இளைஞருடன் உள்ளனர்.

சிகிச்சையில் இருந்து வரும் அந்த இளைஞர் குணமடைந்த பின்னரே, அடுத்த கட்ட விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!