விருப்பத்துக்கு மாறாக திருமணம் – இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கோரி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகள் தொடர்ந்த வழக்கில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் மகள் டெல்லிக்கு வந்து இங்குள்ள உள்ள மகளிர் ஆணையத்தின் ஆதரவில் தங்கியுள்ளார்.

திருமணத்தின்போது மணமக்களின் சம்மதம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்து திருமண சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவை நீக்கம் செய்ய வேண்டும் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடியதால் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

இந்து திருமண சட்டத்தில் மணமகன் அல்லது மணமகளின் சம்மதத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை என்னும் பொருள்படும் சட்டப்பிரிவை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஒருவரின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தாலும், இந்து திருமண சட்டத்தின் 12C பிரிவின்படி, கட்டாய திருமணம் அல்லது சம்மதம் தெரிவித்ததாக போலி அத்தாட்சியுடன் நடத்தப்பட்ட திருமணத்தை சட்டப்படி ரத்து செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்து திருமண சட்டம் என்ற அரசியலமைப்பு சார்ந்த விவகாரங்களுக்குள் நுழைந்து இவ்வழக்கை விசாரிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

ஆள்கொணர்வு மனுவாக கருதி இவ்வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டதுடன் இவ்வழக்கில் தொடர்புடைய பெண் மற்றும் அவரது பெற்றோரின் அடையாளம் வெளியாக கூடாது என்ற கோரிக்கையும் ஏற்றுகொள்ளப்பட்டது.

மறுவிசாரணையை வரும் மே மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட் அதுவரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்குமாறு அறிவுறுத்தி, இவ்வழக்கில் தொடர்புடைய எதிர்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் டெல்லி போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!