கிரீஸ் நாட்டில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்!

கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவர், கொள்ளையர்களால் சுமார் ஒரு மணி நேரம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அதிகாலை, பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து பாபிஸை கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள்.

தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.

பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார்.

ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட, கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நடந்தது என்னவென்றால், கரோலின் சத்தமிட்டதால், அவரது கழுத்தை துணியால் ஒருவன் நெறித்திருக்கிறான். அதில் அவர் இறந்துவிடவே, கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக பாபிஸ் வீட்டில் பணம் இருப்பது எப்படி அந்த திருடர்களுக்கு தெரிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது, பாபிஸ் அப்போதுதான் ஒரு நிலம் வாங்கியிருக்கிறார். அதில் வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்காக அவரிடம் சுமார் 13,000 பவுண்டுகள் பணம் இருந்துள்ளது.

அதை அவர் வீட்டில் வைத்திருந்த விடயம் குறித்து யாரோ அந்த கொள்ளையர்களுக்கு துப்புக் கொடுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இன்னொரு படி மேலே போய், ஒருவேளை தம்பதியரின் உறவினர்களிலேயே யாராவது துப்புக் கொடுத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த திருடர்கள், கைகளில் ஆயுதம் வைத்திருந்தும், கரோலினை அவரது சட்டையைப் பயன்படுத்தியே, கைகளால் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்.

அத்துடன், 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். ஆகவே, குற்றத்தை அனுபவித்துச் செய்யும் கும்பலாக இந்த கொள்ளைக் கும்பல் இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

கொள்ளையர்கள் தன் கழுத்தை நெறிக்கும்போது அவர்களுடன் கரோலின் போராடியதால், அவரது கை நகங்களில் அந்த கொள்ளையர்களின் DNA இருக்கலாம் என்பதால், அவரது நகம், அவரைக் கொல்ல பயன்படுத்திய சட்டை ஆகியவற்றைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!