துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் சபாநாயகர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

இதன்படி, அரசியலமைப்புக்கு முரணாண சில சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் விசேட பெரும்பான்மை அவசியமாகும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் கூறியதாக சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது

இதேவேளை குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய நபர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!