றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் விஜேவீரவை தடுப்புக் காவலில் இருந்து, விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

1989ஆம் ஆண்டு நொவம்பர் 13ஆம் நாள் தனது கணவனான, றோகண விஜேவீர சிறிலங்கா படையினரால், கைது செய்யப்பட்டதில் இருந்து, காணாமல் போயுள்ளார் என்றும், அவரது மனைவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது கூட குடும்பத்தினராகிய எமக்குத் தெரியாது.

நாங்கள் வெலிசறையில் உள் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.எமக்கு அச்சுறுத்தல் இருந்ததால், முன்னரே இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரிகேடியர் ஜானக பெரேரா, கப்டன் காமினி ஹெற்றியாராச்சி, லெப். கருணாரத்ன, கேணல் லயனல் பலகல்ல, மேஜர் ஜெனரல் ஹமில்டன் வணசிங்க, மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன, ரஞ்சன் விஜேரத்ன, ஜெனரல் சிறில் ரணதுங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!