மூச்சுத்திணறலால் ஆஸ்பத்திரியில் அனுமதி- விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

பேசும் திறன் குறைந்து எழுந்து நடமாடவும் அவர் சிரமப்பட்டார். இதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அழைத்து சென்று விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் விஜயகாந்தின் உடல்நிலை சீராகவில்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து அவர் மீண்டார்.

இந்தநிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பேச முடியாமல் அவதிப்பட்ட அவர் கைகளை மட்டும் காட்டியபடி பிரசாரம் செய்தார். இதன்பிறகு சென்னை வடபழனியில் உள்ள வீட்டில் தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்தார்.

நேற்று அதிகாலையில் விஜயகாந்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு விஜயகாந்துக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐ.சி.யூ. வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்துக்கு இன்று 2-வது நாளாக தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சைகளை டாக்டர்கள் தீவிரமாக அளித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தே.மு.தி.க. சார்பில் மட்டுமே நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் மியாட் மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் தெரியாமலேயே உள்ளது.

விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் பற்றி மியாட் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

விஜயகாந்துக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அவரது கட்சியினரும் ஆர்வமுடன் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!