சமூக வலைத்தளங்களிடம் மத்திய அரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் என்ற தவறான பெயரை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கரோனா வைரஸில் உருமாற்றம் அடைந்த பி.1.6.17 எனும் வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது எனத் தெரிவித்தது.

ஆனால், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் அவ்வாறன வார்த்தையை பயன்படுத்துவதால், அதை நீக்குமாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து சமூக ஊடகங்களுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் எனும் வார்த்தையை உடனடியாக உங்கள் தளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் எனும் வார்த்தை முற்றிலும் தவறானது.

அதுபோன்று வார்த்தையை உலக சுகாதார அமைப்பு ஒருபோதும் பயன்படுத்தவில்லை. உலக சுகாதார அமைப்பு உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617 எனும் வைரஸ் மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.

இதுபோன்று இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, நாட்டின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘ சமூகவலைத்தளங்களுக்கு மத்திய அரசு தெளிவான மற்றும் கண்டிப்பான உத்தரவின் மூலம் இந்தியாவில் உருவான கரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்த வார்த்தை பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, தேசத்தின் மரியாதையை சர்வதேச அளவில் களங்கப்படுத்துகிறது’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த 12ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், ‘ இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் எனும் வார்த்தையை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தவில்லை. ஆனால் சில ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இதைப் பயன்படுத்துகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தள மூத்த அதிகாரி ஒருவர் கூறுைகயில் ‘ மத்திய அரசு கூறியிருப்பது போல் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் எனும் வார்த்தையை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்குவது சாதாரணமானது அல்ல. லட்சக்கணக்கான பதிவுகள் இருக்கின்றன அதில் இந்த குறிப்பிட்ட வார்த்தையை மட்டும்நீக்குவது கடினமான பணி’ எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!