அரசின் கொள்கைளை விமர்சித்தால் கடும் நடவடிக்கை! -மேஜர் ஜெனரல் முனசிங்க எச்சரிக்கை

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவது, தாபன சட்டக் கோவையின் பிரகாரம் குற்றம் எனவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க எச்சரித்துள்ளார்.

இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் ”ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல்” எனும் தலைப்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அனைத்து மாகாண சுகாதார செயலார்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார நிறுனவங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும், அதனை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இனி மேல் அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிடும் சுகாதாரத் துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாபன விதிக் கோவையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!