பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பெயர்ப்பட்டியலுக்கு அமைய, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல் மாகாணத்தில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.

அதற்கமைய, COVID-19 கட்டுப்பாடு தொடர்பான எவ்வித கடமைகளிலும் தமது சங்க உறுப்பினர்கள் இன்று பங்கேற்க மாட்டார்கள் என அவர் கூறினார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் Astrazeneca Covishield கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசி நேற்று ஏற்றப்பட்டது.

எனினும், சுகாதார துறையில் தடுப்பூசி ஏற்ற வேண்டிய பல தரப்பினர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், மருத்துவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை உரிய நடவடிக்கை அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சலுகை வழங்கும் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வௌியிடுவதுடன், பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கோரிக்கை விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!