அனைத்துக் குழறுபடிகளுக்கும் பவித்ராவே காரணம்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் ஏற்பட்டுள்ள அனைத்துக் குழறுபடிகளுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே பொறுப்பேற்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது சுகாதார அமைச்சின் செயற்பாடுகள், கொள்கை ரீதியான தீர்மானங்கள், நாட்டை முடக்குதல் ஆகிய விடயங்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. அதன் விளைவுகளில் ஒன்றாக வசதி வாய்ப்புள்ளவர்களே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையொன்று உருவாகியுள்ளது.

அதன் காரணமாக அனைத்து வகையான மருத்துவப் பணியாளர்களும் தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதற்குரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், இன்று முதல் பணியிலிருந்து விலகுவதுடன் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிற்குள் மாத்திரம் தடுப்பூசிகள் பகிரப்படல், தடுப்பூசிகள் விசேட வரப்பிரசாதமாக்கப்படல் மற்றும் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்தவொரு பிரிவினருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவையாக இருத்தல் ஆகிய காரணங்களினால் இந்த கடினமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைசார் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல்களுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதில்லை. சுகாதார அமைச்சரின் தீர்மானங்கள் முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனை ஆய்வுகூடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலாத நிலையேற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் வைத்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது உண்மையில் சுகாதார அமைச்சில் உள்ள குறைபாடாகும். ஏனெனில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அனைவருக்கும் உள்ளது.

வரையறுக்கப்பட்ட தடுப்பூசிகளே உள்ள நிலையில், அதனை யாருக்கு வழங்குவதெனத் தீர்மானிக்கும்போது யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் உரிய செயற்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். தடுப்பூசிக்கான அவசியத் தேவையுடைய பல முன்னரங்க ஊழியர்கள் இருக்கின்றார்கள் என்பதை மனதில்கொள்ளவேண்டும்.

எனவே இந்தக் குழறுபடிகளுக்கும் மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அனைத்திற்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே பொறுப்புக் கூறவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!