கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி ஒரு குடும்பத்தையே திட்டமிட்டு கொன்ற கல்லூரி இளைஞன்!

தமிழகத்தில், கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, இளைஞர் ஒருவர் குடும்பத்தையே தீர்த்து கட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் முதல் மனைவியின் பெயர் சாமியாத்தாள் (61). இவர்களுக்கு ரவி என்ற மகன் உள்ளார்.

முதல் மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டார். அவரது 2-வது மனைவி பெயர் மல்லிகா (55). இவர்களுக்கு தீபா (28) என்ற மகள் உள்ளார். தீபாவிற்கு பிரபு என்பவருடன் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.

கருப்பண்ணன், 2-வது மனைவி மல்லிகா மற்றும் மகள் தீபாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கருப்பண்ணன் அவரது தோட்டத்தில் மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலையாள் முருங்கைத்தொழுவை சேர்ந்த சின்னப்பன் மனைவி குப்பம்மாள் (70) ஆகியோர் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், கருப்பண்ணனிடம் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகவும், இதற்காக நான் வழங்கும் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைப் பற்றி முழுமையாக விசாரிக்காமல், அவர் சொன்னதை நம்பி, கருப்பண்ணன், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோர் அவர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கருப்பண்ணனின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சென்னிமலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறி மாத்திரை சாப்பிட மறுத்துள்ளார்

அதன் பின்னர், மாத்திரையை சாப்பிட்ட 4 பேரையும் அந்த நபர் எடுத்து வந்த ஒரு கருவி மூலம் சோதனை செய்வதை போல் நடித்து கொரோனா இல்லை என கூறி திரும்பியுள்ளார்

. இதற்கிடையில், மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட, இதைக் கண்ட. தீபாவின் கணவர் பிரபு, 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மல்லிகா செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

கருப்பண்ணன், தீபா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குப்பம்மாளும், தீபாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கருப்பண்ணனிடம் கல்யாணசுந்தரம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் கருப்பண்ணனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் பிரச்னை ஏற்பட்டதால், கருப்பண்ணணையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதற்கு கல்யாணசுந்தரம், அவரது மனைவியின் உறவினரான சென்னிமலை சரவணபூரி எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவரான சிதம்பரம் மகன் சபரி (20) என்பவர் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதாக நடித்து தென்னை மரத்திற்கு வைக்கப்படும் சல்பாஸ் மாத்திரையை கொடுத்து 3 பெண்களை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரத்தையும், சபரியையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் மூலம், யார் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி வந்தாலும், முழுமையாக அவரைப் பற்றி விசாரித்து, அதன் பின் அது உண்மை தான என்ற நம்பிக்கை வந்த பின்னரே எதுவாக இருந்தாலும் செய்து கொள்ளும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!