தமிழக விஞ்ஞானிகள் வடிவமைத்த சுனாமியை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிக்கு இந்திய காப்புரிமை

தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு கருவிக்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற பேரழிவை முன்கூட்டிய அறியும் பொருட்டு, தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (NIOT) ரா.வெங்கடேசன் தலைமையில், மா.அருள் முத்தையா, அர.சுந்தர், கி.ரமேஷ் ஆகிய 4 தமிழ் விஞ்ஞானிகள் கொண்ட குழு, கடல் படுகையில் ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவாக உருவாகும் சுனாமியைக் கண்டறிய உதவும்மிதவைகளை உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

சுனாமியை கண்டறியும் கருவி தொடர்பாக ரா.வெங்கடேசன் கூறியதாவது:

இந்தக் கருவி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நவீன, தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் இக் கருவியில் உள்ளன. இதன் தரவுத் தொகுப்புகள் செயற்கைக்கோள் மூலம் ஒரே நேரத்தில் என்ஐஓடி தரவு மையம் மற்றும் இன்காய்ஸ்(INCOIS) சுனாமி எச்சரிக்கை மையத்துக்கும் நிகழ்நேரத்தில் சுனாமி பற்றிய தகவல்களை அனுப்பு கின்றன.

மேலும் இந்த தரவுத் தொகுப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் பகிரப்படுகின்றன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா சுயசார்புடன் சுனாமிமிதவையை வடிவமைத்து நிறுவியுள்ளது. கரோனா தொற்று மற்றும்ஊரடங்கு காலத்திலும் இம்மிதவையை பராமரிக்க என்ஐஓடி விஞ்ஞானிகள் ஆழ்கடலில் பயணம் செய்து வருகின்றனர்.

இத்தகைய மிதவையைக் கண்டுபிடித்ததற்காக ‘நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு முறை’ (REAL TIME TSUNAMI MONITORING SYSTEM) என்ற தலைப்பில், எங்கள்குழுவுக்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழக இயக்குநர் க.ராமதாஸ் கூறும்போது, இந்த கடல்சார் தொழில்நுட்பக் கழகம், கடல் பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சுனாமி வருவதை முன்கூட்டிய தெரிவித்து எச்சரிக்கும் இந்தக் கருவி. இக் கருவி, சேகரிக்கும் தரவுகளை உடனுக்குடன் செயற்கைக்கோளுக்கு அனுப்பி, அங்கிருந்து என்ஐஓடி மற்றும் இன்காய்ஸ்ஆகியவற்றுக்கு அனுப்பி வைக் கிறது.

ஒரு கருவி நன்றாக ஆய்வு செய்தாலும், அதன் தரவுகள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும். இந்த கருவியின் சிறப்பே தகவல்தொடர்புதான். இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காகஉழைத்த எங்கள் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!