மூன்றாம் உலகப் போர்: மேலை நாடுகளை மறைமுகமாக எச்சரித்த ரஷ்யா!

பிரித்தானியா போர் கப்பலுக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் உதவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவை கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷ்யா தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவும், பிரித்தானியாவும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரித்தானியா கடற்படைக்குச் சொந்தமான டிபண்டர் கப்பல் கடந்த 23-ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது.

இதையடுத்து, பிரித்தானியா கப்பலை எச்சரிக்கும் வகையில் தங்களது போர்க் கப்பல்கள் சுட்டதாகவும், பிரித்தானியா கப்பல் சென்ற பாதையின் குறுக்கே போர் விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியதாகவும் ரஷியா கூறியது.

இதை பிரித்தானியா மறுத்து வருகிறது. இது குறித்து ரஷ்யா அதிபர் புடின் கூறுகையில், கடந்த வாரம் கிரீமியா கடல் எல்லைக்குள் பிரித்தானியா கப்பல் அத்துமீறி நுழைந்தபோது, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் அந்தக் கப்பலுடன் தொடர்பில் இருந்து உதவிகள் செய்துள்ளது.

அந்தச் சம்பவத்தின்போது ரஷ்யாவின் எதிர்வினைகள் குறித்து அறிந்துகொண்டு, அதனை பிரித்தானிய கப்பலிடம் தெரிவிக்கும் செயலில் அமெரிக்க விமானம் ஈடுபட்டது.

நாங்கள் அந்த பிரித்தானியா கப்பலை மூழ்கடித்திருந்தால்கூட மூன்றாம் உலகப் போர் மூண்டிருக்காது. அத்தகைய ஒரு போரில் இனி எங்களை வெல்ல முடியாது என்பது மேலை நாடுகளுக்கு நன்றாகவே தெரியும் என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!