இலங்கையின் தேயிலைத்தோட்ட தொழிலுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ள கோவிட் – துஷார பிரியதர்ஷன

இலங்கையின் சிறு தேயிலைத் தோட்ட தொழிலுக்கு, கோவிட் தொற்றுநோய் ஆசீர்வாதமாக அமைந்துள்ளது என்று தோட்டத் துறையுடன் இணைந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் துஷார பிரியதர்ஷன இதில் ஒருவராவார்.

கோவிட் காலத்தில் சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தி 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதால், தொற்றுநோய், தேயிலை உற்பத்திக்கு ஒரு ஆசீர்வாதமாகவே இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

கோவிட் காலத்தில் முடக்கல் நிலை காரணமாக, மக்கள் தமது அதிகமான நேரத்தைக் கொழுந்து பறிப்பதில் செலவிடுகிறார்கள். இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் 284 மில்லியன் கிலோவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த தேயிலை உற்பத்தி 300 மில்லியன் கிலோவைத் தாண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேயிலையின் எதிர்காலம் குறித்து கருத்துரைத்துள்ள, தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் தம்மிக ஜி.மஹிபால,

தேயிலைத் தோட்டத்திற்கு ஏற்ற வெப்பநிலை உள்ள கேகாலை மற்றும் கம்பஹா எல்லையில் தென்னை பயிர் செய்கையுடன், தேயிலை பயிர் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“கிரிசீரியா தாவரங்கள் போன்ற மரங்களை நடவு செய்வதன் மூலம் தேயிலை செடிகளுக்கு ஒரு நிழலை வழங்குவதுடன் அவற்றுக்கான வெப்பநிலையையும் பொருத்தமானதாக மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!