ஒரு ரூபாயைக் கூட செலவிடாமல் ஜப்பான் சென்ற அமைச்சர்கள் மீது விசாரணை!

ஒலிம்பிக் போட்டிகளைக் காண இராஜாங்க அமைச்சர்கள் தெனுக விதானகமகே, டி.வி.சானக மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் மூன்று ராஜாங்க அமைச்சர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்தமை மற்றும் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசியக் கொடியைக் காட்டத்தவறியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அரசாங்க செலவினங்களை முடிந்த வரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நேரத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்ந்து மூன்று ராஜாங்க அமைச்சர்கள், ஜப்பான் சென்றமை குறித்தே செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமக்கு தெரிந்தவரை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையிலேயே சென்றுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயைக்கூட செலவிடவில்லை. எவ்வாறாயினும், உண்மையை வெளிப்படுத்த ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!