ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாட் தொடர்பு! – நீதிமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீன்விசேட சலுகைகளை வழங்கியிருந்த விதம், பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் உயர் நீதிமன்றத்திற்கு இன்று இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நியாயமான காரணங்களும் இன்றி, தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதம் என தெரிவித்து, ரிஷாட் பதியூதீன் மற்றும் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தற்கொலை குண்டுதாரியால் வெல்லம்பிட்டியில் செப்பு தொழிற்சாலை 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக ரிஷாட் பதியுதீன் செயற்பட்டதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு சொந்தமான இரும்பு மற்றும் உலோகப்பொருட்களில் 86 வீதமானவற்றை குறித்த செப்பு தொழிற்சாலைக்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் அப்போதைய ஜனாதிபதி செயலாளரின் ஆலோசனையை பெறாது பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலைக்கு, விசேட அனுசரணை வழங்குவதற்கு அப்போதைய கைத்தொழில் அமைச்சராக செயற்பட்ட ரிஷாட் பதியுதீனும் அவரின் இணைப்புச் செயலாளரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை நம்ப முடியாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியமை, ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, சண்முகம்பிள்ளை பாலசுப்ரமணியம் என்பவர் வௌிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!