‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் அமல்படுத்த வேண்டும்’ – மூத்த நீதிபதி என்.கிருபாகரன்!

காந்தியின் கனவை நனவாக்கும் விதமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும் எனபிரிவு உபச்சார விழாவில் மூத்த நீதிபதி என்.கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்தநீதிபதியாக பணியாற்றிய என்.கிருபாகரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிதலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி என்.கிருபாகரனின் தாயார்ராஜம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, ”நீதிபதி என்.கிருபாகரன், ஹெல்மெட் கட்டாயம், நீட் தேர்வு, குற்றாலஅருவி சுத்தம், பாலியல் வன்கொடுமை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, தமிழ் வழிக்கல்விக்கு முன்னுரிமை, மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது, உள்ளாட்சி தேர்தல் ரத்து, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி, டிக் டாக்தடை, 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது, மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள், நீட் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை, மாணவர்களின் தற்கொலையை தடுத்தல், சதுப்பு நிலப்பாதுகாப்பு என சமூக நோக்குடன் அதிரடியாக தீர்ப்புகளை வழங்கி மக்கள் நீதிபதியாக திகழ்ந்தவர்” என பாராட்டிப் பேசினார்.

அதன்பிறகு நீதிபதி என்.கிருபாகரன் தனது ஏற்புரையில் பேசும்போது, ”எனது தந்தையின் கடின உழைப்பால் இன்று நான் உங்கள் முன் நீதிபதியாக நிற்கிறேன். இத்தருணத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவுள்ள எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற எம்.சத்திய நாராயணன் ஆகியோருடன் எனது சீனியர்களையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்ல வேண்டும்.

பொதுமக்களின் கடைசி புகலிடம் இந்த நீதிமன்றம். அதற்கு வழக்கறிஞர்கள் சரியாக இருந்தால்தான் நீதித் துறை சிறப்பாக செயல்பட முடியும். இல்லையென்றால் மக்கள்நீதித் துறையின் மீது நம்பிக்கை இழந்துவிடுவர். நாட்டு விடுதலைக்காக போராடிய பலர் வழக்கறிஞர்கள். இன்று வழக்கறிஞர்என்றாலே எதிர்மறையான சிந்தனைதான் மக்களிடம் உள்ளது.

வழக்கறிஞர் தொழிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். எனதுபணிக்காலத்தில் இதுவரை கருத்து வேற்றுமையால் பிரிந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன். யாருக்கும் பயப்படாமல் மனசாட்சிக்கு பயந்து மனிதாபிமானத்துடன் நேர்மையாக தீர்ப்பளித்துள்ளேன் என்ற மன திருப்தியுடன் செல்கிறேன்.

ஆனால் வழக்கறிஞர் தொழிலைமுறைப்படுத்த முடியாததும், டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் வேதனைதான். காந்தியின் கனவைநனவாக்கும் விதமாக பூரண மதுவிலக்கை விரைவில் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும். அதுபோல நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நீதிபரிபாலனம் எளிதாக கிடைக்க உச்ச நீதிமன்ற கிளை சென்னை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பணி ஓய்வு பெற்ற நேற்று மட்டும், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.வைத்யநாதன், வி.பார்த்திபன், பி.வேல்முருகன், ஆர்.பொங்கியப்பன், பி.புகழேந்தி, டி.வி.தமிழ்செல்வி என 8 அமர்வுகளில் நீதிபதி என்.கிருபாகரன் அமர்ந்து பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று பிற்பகலில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியுடன் நீதிபதி என்.கிருபாகரன் முதன்மை அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். அப்போது, வழக்குகளுக்கு ஆஜராகி இருந்தவழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதி கிருபாகரனின் பணியைவெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதில் நெகிழ்ச்சியடைந்த நீதிபதி கிருபாகரன், கண் கலங்கினார். அப்போது அவர், ”நான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய இத்தனை ஆண்டுகளில், இந்த கடைசி நாளில்தான் முதன்முறையாக தலைமை நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் மனமார நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!