இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நீதி அமைச்சரின் அவசர வேண்டுகோள்

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் உடனடியாக தடுப்பூசியை பெற்று நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில் சுமார் 10 வீதமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கோவிட் தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது.

இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சு, பொலிஸ் தரப்பு என்னிடம் கவலை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களினால் அங்கீகரிக்கப்பட்டதே இந்த கோவிட் தடுப்பூசி, இதில் எவ்விதமான பாதக விளைவுகளும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகையினால் இந்த விடயத்தில் எவரும் எவ்வித சந்தேகமும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

எனவே, உடனடியாக முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்று, தம்மையும் தமது குடும்பத்தினரையும் மரணத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!