ஓணம் பண்டிகை தளர்வால் கேரள மாநிலத்துக்கு நேர்ந்த அவல நிலை!

கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நிலவரம் தொடர்பாக இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் கேரளா பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெகுவாக அதிகரித்த நிலையில், அதன்பின்னர் குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் சென்றனது. அதற்கு காரணம் கேரளாவில் கொரோனா அதிகரிப்பதே என்பது என கூறப்படுகிறது.

அதாவது, கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது கேரள அரசு. இதற்கு நீதிமன்றம் உட்பட பல்வேறு தரப்புகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு பின்பு கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று தினசரி பாதிப்பு 13,383 ஆகவும் இறப்பு 90 ஆகவும் கேரளாவில் பதிவானது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 215 பேர் உயிரிழந்துள்ளனர். 2 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் கேரளாவில் இருந்துதான் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!