“ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒவ்வொருவராக கருவறுப்பேன்” – ஜோ பைடன் ஆவேசம்!

காபூல் விமான நிலையத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒவ்வொருவராக கருவறுப்பேன் என ஜோ பைடன் ஆவேசமாக பேசியுள்ளார்.

காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க மக்களுக்கு விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி ஜோ பைடன். அதில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

தமது அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகளை மொத்தமாக கருவறுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார். அமெரிக்க மக்களை காயப்படுத்த நினைக்கும் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் என கூறிய பைடன்,

நாங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ போவதில்லை. அமெரிக்கா கண்டிப்பாக உங்களை வேட்டையாடும், உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும் என்றார்.

அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்காக போராடவும் எப்போதும் தமது அரசாங்கம் முன்வரிசையில் நிற்கும் என்றார் ஜனாதிபதி ஜோ பைடன்.

காபூல் விமான நிலையம் அருகே முன்னெடுக்கப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 140கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும், சில மணி நேரங்களுக்கு பின்னர் 3வது வெடிகுண்டு தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!