மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – மக்கள் கவலையில்

அத்தியாவசிய பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபாவிற்கும், சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபாவிற்கும், உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம்300 ரூபாவிற்கும் இந்திய உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 240 ரூபாவிற்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 135 ரூபாவிற்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மொத்த விற்பனையாளர்கள் விலையை அதிகரித்துள்ளமை காரணமாக சில்லறை வர்த்தகர்களும் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சதொச விற்பனை நிலையத்தில் இதுவரை 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனி தற்பொழுது 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் வெள்ளை சீனி கிடைக்கவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் சீனியை பெற்றுக்கொடுக்க முடியும் என சதொச விற்பனை நிறுவகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய ஒரு கிலோகிராம் போஞ்சி மொத்த கொள்வனவாளர்களுக்கு 240 ரூபாவிற்கும், சாதாரண நுகர்வோருக்கு 280 முதல் 290 ரூபாவிற்கும், கரட் ஒரு கிலோகிராம் மொத்த கொள்வனவாளர்களுக்கு 140 ரூபாவிற்கும், சாதாரண பாவனையாளர்களுக்கு 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, கோவா ஒரு கிலோகிராம் 250 ரூபாவிற்கும், பீட்ரூட் உள்ளிட்ட மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு மத்தியில் அனைவராலும் கொள்வனவு செய்யப்படும் இஞ்சி ஒரு கிலோகிராம் 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!