வர்த்தக அமைச்சர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் கூட்டுறவு திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் எந்த வகையிலும் தலையிடுவதில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் பொறுப்பின் கீழ் உள்ளன. எனினும் பந்துல குணவர்தன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்பதால், கண்காணிப்பு மட்டத்தில் அவற்றின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் இருவரும் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன கூறியிருந்தமை மற்றும் சில தரப்பில் இருந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொண்டு அமைச்சர் பந்துல குணவர்தன இந்த நிறுவனங்களில் எந்த நடவடிக்கைகளிலும் தலையிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

சதோச உட்பட அரச நிறுவனங்களில் நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும்,மேல் மட்டத்தில் இருந்து முகாமையாளர் வரையில் இந்த மோசடிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் துஷான் குணவர்தன குற்றம் சுமத்தி இருந்ததுடன் அவை தொடர்பான விபரங்களை ஊடகங்களுடனும் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!