பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வு!

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த ஜனநாயக நாடாக விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று முற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் மரபுகளுடன் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம், இலங்கையுடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்களை, இந்த விஜயத்தின் போது, மேற்படி பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்திருக்கின்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வொன்றின் தேவை தொடர்பில் வலியுறுத்தினர். இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கையொன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேவையான குழுக்களை நியமித்து, அவற்றின் அறிக்கைகளுக்கமைய, நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய உலகின் மனித உரிமைகள் தொடர்பில் காணப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனால் அரசாங்கத்தின் திட்டமிடல்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடைகள் பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!