சந்திக்க மறுத்த ஜனாதிபதி – முக்கிய அறிக்கையை வெளியிடத் தயாராகும் பங்காளிக் கட்சிகள்!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பான தங்களது கருத்துக்களை நாட்டுக்கு அறிவிக்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் துறைமுக தொழிற்சங்கத் தலைவர்களுடன் அடுத்த சில நாட்களில் இடம்பெறும் சந்திப்பின் பின்னர், பங்காளிக் கட்சித் தலைவர்கள் அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை மாற்றுவதற்கான தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் கடிதம் அனுப்பியபோதும் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி மறுத்துள்ளார் .

யுகதனவி மின் நிலையத்தில் பங்குகளை மாற்றுவது தொடர்பாக கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று ஜனாதிபதி அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்குமாறு ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அசங்க நவரத்ன உள்ளிட்ட பத்து கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!