அமெரிக்க நிறுவன உடன்பாட்டுக்கு எதிராக மனுத் தாக்கல்!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான நியூ போட்ரஸ்க்கு வழங்குவதற்கு எதிராக, கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் வணக்கத்துக்குரிய எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நியூ போட்ரஸ் நிறுவனத்துடனான திரவ எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் மஞ்சுள பாலசூரிய மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், நியூ போட்ரஸ் நிறுவனம், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தங்களது மற்றும் நாட்டு மக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதார்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த ஒப்பந்தம் தொடர்பாக செப்டம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை யுகதனவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமாறும் கோரியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!