‘2025 வரை இது தான் கதி’ – வடகொரிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடகொரியாவில் தங்கள் நாட்டு மக்களை குறைந்த அளவு உணவே எடுத்துக் கொள்ளும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகில் மர்மம் நிறைந்த நாடுகளில் ஒன்று தான் வடகொரியா, இங்கு என்ன நடந்தாலும் அந்தளவிற்கு எதுவும் வெளியில் தெரிவதில்லை. அந்த அளவிற்கு அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டு மக்களை 2025-ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லையை மீண்டும் திறக்கும் வரை குறைந்த அளவே உணவுகளை சாப்பிடும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், வடகொரியாவில் ஏற்கனவே மக்கள் பட்டினியால் தவித்து வருகின்றனர்.
தற்போது மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, மக்கள் தங்கள் வயிற்றை கட்டிக் கொள்ளும் படி கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவுடன் ஆன எல்லையை வடகொரியா மூடியது. இது வடகொரியாவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் நாட்டில் தினசரி வாங்கப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தன.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு வடகொரியா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு விளைந்த ஏராளமான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தன.

அதுவே இந்த ஆண்டு பார்த்தால், சரியான மழை இல்லாமல் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வடகொரியாவில் இருக்கும் மோசமான வடிகால், காடுகள் அழிப்பு மற்றும் பழமை வாய்ந்த உள்கட்டிட அமைப்பால் அவ்வப்போது, கோடை மழையால் வடகொரியாவில் விவாசாயிகள் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். இது பிற துறைகளிலும் அப்படியே பிரதிபலிக்கிறது.

இதனால் வடகொரியாவில் கடும் பஞ்சம் நிலவும் சூழல் நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் தான் அங்கிருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், 2025-க்கு முன்னர் சீனாவுடன் ஆன எல்லையை திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, எனவே உணவு நிலைமை சரியாக வேண்டும். இது அவசர நிலையாக உள்ளது. வரும் 2025-ஆம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவு உணவு பொருட்களை பாதுகாத்து உட்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வட கொரியாவில் சுமார் 860,000 டன் உணவு பற்றாக்குறை இருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டிருக்கும் நிலையில், இப்போதே அங்கு உணவு பஞ்சம் வந்துவிட்டது.

ஆனால் வடகொரியா அரசு இதற்கு முக்கிய காரணம் கொரோனா பாதிப்பு தான், இதன் விளைவாகவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மக்களிடம் கூறி வருகிறது. அதாவது, நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, இயற்கை பேரழிவு, உலகாளவிய கொரோனா பாதிப்பு போன்றவற்றை மேற்கோள் காட்டு தப்பி வருகிறது.

இதற்கு அங்கிருக்கும் மக்கள் வெளியில் சொல்ல முடியாமல் இப்படி குறைந்த அளவு சாப்பிட சொல்வதும், பட்டினியாக இருக்க சொல்வதும் ஒன்று தான் என்று வேதனையில் புலம்பி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!