மூன்று அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும்?

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியின் தலைவர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் அமைச்சு பதவி விரைவில் பறிபோகும். வாசுதேவ நாயணக்கார,விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி,பிரதமர் முன்னிலையில் யுகதனவி விவகாரத்தை கடுமையாக சாடவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்கள் தற்போது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். யுகதனவி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த வாரம் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார,உதயகம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மாநாட்டில் முன்வைத்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை மறுபரிசீலனை செய்ய அவதானிப்புக்களை முன்வைப்பதாக இணக்கம் தெரிவித்தார்கள்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை பங்காளி கட்சி தலைவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அமைச்சு பதவிகள் விரைவில் பறிபோக நேரிடும். அமைச்சு பதவிகளை துறக்க தயார் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கான தீர்மானத்தை எடுக்காமல் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

யுகதனவி மின்நிலையம் அமெரிக்க நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டால் மின்கட்டமைப்பு முன்னேற்றமடைவதுடன், நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.
குறுகிய நோக்கிற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் நாட்டுக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தி செயற்படுத்திட்டங்களை கைவிடமுடியாது.

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல்களை இலக்காகக்கொண்டு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களை விமர்சிப்பது முற்றிலும் தவறானதாகும்.

ஆகவே பங்காளி கட்சிகளின் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து பொதுஜன பெரமுன எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!