நாடாளுமன்றத்திற்கு தகவல்களை வழங்க அமைச்சர்கள் கடமைப்பட்டுள்ளனர் – ரணில் விக்ரமசிங்க

ஏதேனும் ஒரு உடன்படிக்கை பற்றி கேள்வி எழுப்பும் போது அது சம்பந்தமாக நாடாளுமன்றத்திற்கு தகவல்களை வழங்க அமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமைப்பட்டுள்ளனர் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wikramasinge) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு தகவல் வழங்குவதை தவிர்க்கும் உடன்படிக்கைகள் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 43 வது ஷரத்தின் கீழ் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்புக் கூற வேண்டும்.

இது 4 வது ஷரத்தின் மூன்றாவது உப ஷரத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரம் சம்பந்தமான சட்ட அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
இதற்கு அமைய நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளுக்கு மேலதிகமாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உரிமைகளும் எமக்குள்ளது.

இந்த சகல சிறப்புரிமைகளும் உரிமைகளும், நாட்டின் சாதாரண சட்டத்தின் பகுதிகள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!