அருட்தந்தை சிறில் காமினி சி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு!

அருட்தந்தை சிறில் காமினி இன்று சி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றில் கடந்த 8 ஆம் திகதி எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைய, வாக்கு மூலம் பெற சி.ஐ.டி.யினர் அருட்தந்தை சிறில் காமினியை அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட்டிருந்தார்.

அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள் பிரகாரமும், தண்டனைச் சட்டக் கோவையின் அத்தியாயங்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அது குறித்த விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளது.

அவர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!