2023 ஆம் ஆண்டுக்குள் ஆட்சிமாற்றம்!

2023 ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காகவும்,அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் தேவைகளுக்காக சுகாதார தரப்பினர் பயன்படுத்திக் கொள்ளப்படுவது முற்றிலும் தவறானதாகும். அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய செயற்பட வேண்டிய தேவை கிடையாது.

ஊடக சுதந்திரம் தற்போது முடக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளன.
யுத்த காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன அதன் தன்மை தற்போதும் தொடர்கிறது.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையை தீர்மானிக்கும் உரிமையை வர்த்தகர்கள் வசம் காணப்படுவதால் நுகர்வோர் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியி;ல் அரசாங்கம் இரகசியமான முறையில் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
தொழிற்சங்கத்தினர் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மாத்திரமல்ல, ஆளும் தரப்பின் உறுப்பினர்களும் வெறுப்புக் கொண்டுள்ளார்கள்.

2023ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!