நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவேன்

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை எதிர்வரும் ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சவாலான காலங்களில் பணிகளை இடைநிறுத்த இடமளிக்கக் கூடாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை மூலம் தேவையான முடிவுகளை துரிதப்படுத்தி உரிய பணிகளை முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து நிறுவனங்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கையால் நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டஅரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!