சிலிண்டர் வெடிப்புகள் – ஆராய நிபுணர் குழு!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து பதிவாகிவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவை தொடர்பில் உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்வைப்பதற்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையிலான இந்தக் குழுவின் அங்கத்தவர்களாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டீ சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டீ.டபிள்யூ.ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கை புத்துருவாக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயன் ஸ்ரீமுத்து, கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்ஷன சோமசிறி, இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹாகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேவையான மற்றும் ஏற்கனவே உள்ள அனைத்து ஆய்வுகள் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை ஆராய்ந்து, இரண்டு வாரங்களுக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதியினால் அக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!