ஆரோக்கியமான அரசியலுக்கு வெற்றிடத்தை நிரப்ப முயலாத இலங்கையின் அரசியல்வாதிகள்

இலங்கையில் பல்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் ஆரோக்கியமான அரசியலுக்கும் வெற்றிடம் நிலவுகிறது.

வெறுமனே பரஸ்பர குற்றச்சாட்டுக்களும் பழிவாங்கல்களும் நிறைந்த அரசியலே இன்று முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இது இலங்கையை அபிவிருத்திப் பாதையில் இட்டு செல்லும் என்று எதிர்பார்க்கவே முடியாது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதம், இலங்கையின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விவாதங்கள் இடம்பெற்று வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் இதுவரை இடம்பெற்ற விவாதங்களின்போது அரசாங்கமும் எதிர்கட்சிகளும் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏதாவது ஒரு விடயத்தில் இணக்கம் கண்டனவா? என்று பார்த்தால், 100க்கு 99 வீதம் இல்லையென்றே கூறவேண்டும்.

சில அமைச்சுக்களை பொறுத்தவரையில், அந்த அமைச்சுக்களுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர்கள், எதிர்கட்சியினரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டமையை காணமுடிந்தது.
எனினும் பெரும்பாலான அமைச்சர்கள், தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து தளர்வுப்போக்கை காண்பிப்பதற்கு முன்வரவில்லை.

இதற்கு காரணம் அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் எதிர்கட்சியின் யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்கவேண்டியுள்ளமையால், எதிர்கட்சியினரின் கருத்துக்களை புறந்தள்ளியே வருகின்றனர்.
அதேபோன்று எதிர்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆலோசனை தெரிவிப்பதை விடுத்து அரசாங்கத்தின் குற்றங்களை இனங்காணும் முயற்சியிலேயே இறங்கியுள்ளனர்.

இதனை பார்க்கின்றபோது நாட்டில், கட்சி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய அரசியல் சார்ந்த விடயங்களை புறந்தள்ளும் நிகழ்வுகளே நிகழ்வதை பார்க்கக்கூடியதாக உள்ளது.
இதற்கு காரணமாக இலங்கை நாட்டுக்கு என்ற ஒரு தனியான தேசியக்கொள்கையில்லாமையே காரணம் என்று கூறமுடியும்.

எனினும் இந்த தேசியக்கொள்கையை வகுக்க இலங்கையில் இதுவரையில் அரசியல்வாதிகளோ அல்லது பொதுத்துறை ஆர்வலர்களோ முன்னின்று செயற்படவில்லை என்பது இலங்கையின் கொள்கை ரீதியான அரசியலுக்கு இப்போதைக்கு இடமில்லை என்பதையே கோடிட்டு காட்டுகிறது.
மறுபுறத்தில் 2022 ஆம் ஆண்டு பாதீட்டு உரைகளின்போது இந்த வருடம் சில குறிப்பிட்ட தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான உரைகளை நிகழ்த்தியதை காணமுடிந்தது.

அதில் குறிப்பிட்டு கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் இம்ரான் மஹ்ரூப் வேலுகுமார், எஸ் எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், சிவநேசத்துரை சந்திரகாந்தன் வடிவேல் சுரேஷ் ஆகியோரை குறிப்பிட்டு கூறமுடியும். இவர்களின் கருத்துக்கள் பல்வேறு இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை கோடிட்டு காட்டின.

அதேநேரம் தமிழ் உறுப்பினர்களை காட்டிலும் ஜேவிவியின் உறுப்பினர்களே மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகைளை வெளிக்கொணர்ந்தனர்.
அத்துடன் அவர்களே நாடாளுமன்றத்தி்ல் வழமை போலவே காத்திரமான அரசியலுக்கு கட்டியம் கூறியதை இந்த பாதீட்டு உரையிலும் காணமுடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!