வடக்கு ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் அதிகரிப்பு!

வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, இத்தகைய சம்பவங்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் ஊடகவியலாளர் விஷ்வசந்திரன் நான்கு இராணுவ சிப்பாய்களால் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் மிகுந்த கவலையடைந்திருக்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இச்சம்பவம் தொடர்பில் இராணுவப்பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. குறித்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணை பயனுள்ளதாக அமையவேண்டுமெனின், அவை துரிதமானவையாகவும் பக்கச்சார்பற்றவையாகவும் இருக்கவேண்டும். இருப்பினும் இச்சம்பவம் குறித்த விசாரணைகளில் அத்தகைய காரணிகள் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதிலும் தண்டனை பெறுவதிலும் இருந்து இலங்கை இராணுவம் பல தசாப்தகாலமாக விலகிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இராணுவ சிப்பாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இவை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யக்கூடிய வகையில் செயற்திறனுடன் பணியாற்றுவதற்கான சூழலை உறுதிசெய்யும் அதேவேளை, இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையில் செயற்படவேண்டும்.

அடக்குமுறைகள் தொடர்பான அச்சமின்றி செயற்படுவதற்கு அவசியமான கடப்பாடுகள் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!