பப்ஜி மோகம்: தந்தை சேமித்து வைத்திருந்த ரூ.8 லட்சத்தை திருடிய சிறுவர்கள்!

வீடு வாங்குவதற்காக தந்தை சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் ரூ.8 லட்சத்தை, பப்ஜி விளையாடுவதற்காக அவரது மகன்கள் திருடியுள்ளனர். அந்த சிறுவர்களிடம் இருந்து பணத்தை அபகரித்ததாக, வணிக வரித் துறையில் உதவியாளராகப் பணியாற்றுபவர், அவரது மனைவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் மளிகைக் கடை நடத்துபவர் நடராஜன். இவரது இரு மகன்களும் 10, 12-ம் வகுப்பு பயில்கின்றனர்.
    
இந்நிலையில், வீடு வாங்குவதற்காக நடராஜன் சேமித்து வைத்திருந்த ரூ.8 லட்சம் காணாமல்போய்விட்டது. இதில் மகன்கள் மீது சந்தேகமடைந்த நடராஜன், அவர்களிடம் விசாரித்தார். இதில் பயந்த சிறுவர்கள், ரூ.8 லட்சம் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், சிறிது சிறிதாக பணத்தை திருடி, பப்ஜி விளையாடுவதற்காக தங்களது நண்பரிடம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “புகாருக்கு உள்ளான 15 வயது சிறுவனின் தந்தை, வணிகவரித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றுகிறார். அடுத்தடுத்த தெருவில் வசித்ததால், நடராஜனின் இரு மகன்களும் எப்போதும் இவர்களது வீட்டிலேயே இருந்துள்ளனர்.

அவர்கள் மூலம் நடராஜன் பணம் வைத்திருப்பதை அறிந்த வணிகவரி உதவியாளரும், அவரது மனைவியும், சிறுவர்களிடம் பாசமாக இருப்பதுபோல நடித்துள்ளனர். பின்னர், வீட்டிலிருந்த ரூ.8 லட்சத்தை திருடவைத்து, அதை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக வணிகவரி உதவியாளர், அவரது மனைவி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!