பசிலுக்கு பொறி வைக்கும் விஜயதாஸ!

பசில் ராஜபக்ஷவை, நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக இருப்பது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்தார்.
    
“பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கு வாக்களிப்பதில் எனக்குப் பிரச்சினை இருந்தது. அரசியலமைப்புக்கு முரணாகவே இந்த வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷவை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம், அவரை நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தார். இதில் 24ஆவது உறுப்புரிமையில், இலங்கையில் குடியுரிமையை பெற்ற எவரும் வேறொரு நாட்டில் அரசியலமைப்பின்படி உறுதிமொழி ஏற்றிருந்தால், அவர்களது குடியுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை கொண்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமையை பெறுவதென்றால் அந்நாட்டு நீதிமன்றத்தின் முன்பாக உறுதிமொழி ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது மூன்று படிநிலைகள் காணப்படுகின்றன. முதலாவது, குறித்த நபர் அதற்கு முன்னர் குடியுரிமையை பெற்றிருந்த நாட்டின் அனைத்துத் தொடர்புகளும் இரத்தாகும். இரண்டாவது உறுதிமொழியை ஏற்பவர்கள், அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்க அரசுக்காக ஆயுதமேந்த வேண்டுமென அழைப்பு விடுக்கப்படும் எந்தவொரு நேரத்திலும் ஆயுதமேந்தி அந்நாட்டுக்காகப் போராட தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது அமெரிக்காவுக்கென விசேட சட்டம். 1952ஆம் ஆண்டு இச்சட்டம் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டாலும், இலங்கையில் 1948ஆம் ஆண்டே வேறொரு நாட்டில் உறுதி மொழி ஏற்றுக்கொள்பவர்களின் குடியுரிமை இரத்தாகும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுப் பின்னரே பசில் ராஜபக்ஷ, இலங்கையில் தன்னைப் பதிவு செய்துகொள்கிறார். இதனூடாக அமெரிக்காவின் அரசுக்கு வழங்கிய உறுதிமொழி, இலங்கையின் அரசியலமைபை பசில் ராஜபக்ஷ மீறியுள்ளார் என்றார்.

ஒரு நபருக்கு இரு நாடுகளின் அரசியலமைப்புக்களை பாதுகாக்க முடியுமென உறுதிமொழி வழங்க முடியாது. 20ஆவது திருத்துச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டாலும், குடியுரிமைச் சட்டம் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ளது என்றார்.

எனவே பசில் ராஜபக்ஷவை நிதி அமைச்சராக ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது. அவ்வாறு இருக்கும்போது நிதி அமைச்சுப் பொறுப்பை எவ்வாறு பெசிலால் ஏற்க முடியும்? இது தொடர்பில் தான் வழக்கு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டே நான் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். எனினும் அப்போது இது தொடர்பில் நான் கூறியிருந்தால் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டிருக்கும் என்பதால் நான் இதனை இரகசியமாக வைத்திருந்தேன் எனவும் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!