சர்வதேச நாணய நிதியத்தை அரசு நாடுவதில் தவறில்லை! – அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசு நாடுவதில் தவறில்லை என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் பல அரசுகள் நெருக்கடியான காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடின. ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டன. அத்துடன் ஏற்க முடியாதவற்றை நிராகரித்தன.

நட்டத்தில் இயங்கும் சில நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கலாம். அரச சேவைக்குப் புதிதாக ஆட்களை இணைத்துக்கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.

அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் தற்போதைக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற அதிக நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது பிரச்சினையாக இருக்காது.

எனினும், சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையோ அல்லது வேறு ஒரு நட்பு நாட்டின் ஆதரவையோ பெற வேண்டியது மிகவும் அவசியமானது” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!