அமெரிக்காவில் கொட்டும் மழையில் குவிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் சடலங்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மருத்துவமனை ஒன்றின் வெளியே, மழையில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குவிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள Gardena மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 20 சடலங்கள் வரையில் மருத்துவமனைக்கு வெளியே கொட்டும் மழையில் குவிக்கப்பட்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    
ஆனால், பாதுகாப்பு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, குளிரூட்டப்பட்ட சவக்கிடங்குகளுக்கு சடலங்களை மாற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய மருத்துவமனையில் 6 சடலங்களுக்கான இடவசதி மட்டுமே உள்ளதாகவும், தற்போது பெருந்தொற்றினால் அதிக இறப்பு நேர்வதால் மருத்துவமனையில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குளிரூட்டப்பட்ட வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், கொட்டும் மழையில் சடலங்கள் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை விதிகளின்படியே சடலங்களை மொபைல் சவக்கிடங்குகளில் பாதுகாப்பதாகவும், அதில் ஈடுபட்ட ஊழியர்கள் தாமதப்படுத்தியிருக்கலாம் எனவும் நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளதாகவும், உண்மையில் குளிரூட்டப்பட்ட அறையில் சடலங்களை தொடர்புடைய மருத்துவமனை பாதுகாக்கவில்லை எனவும் நேரில் பார்த்த பெண் ஒருவர் செய்தி ஊடகத்திடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனைக்கு வெளியே காணப்பட்டதாக கூறப்படும் 19 சடலங்களில் 11 எண்ணம் குடும்பத்தினரால் கைப்பற்றப்படாதது எனவும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகத்தினர் இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கவில்லை எனவும் தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாக்கிழமையில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை சுமார் 300% அதிகரித்து 16,668ல் இருந்து 49,384 பேர்கள் என பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!