சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு: துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விபரீதம்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அம்மாசத்திரம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இன்று பயிற்சி நடந்தது. அப்போது அங்கிருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டு, அருகே உள்ள வீட்டிலிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதனையடுத்து, ஆபத்தான நிலையில் அச்சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    
அங்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்துள்ள குண்டை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூளையில் குண்டடிபட்டுள்ளதால் மிகவும் சிரமத்துடன் போராடிவருகின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஜா பார்த்திபன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார். சிறுவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும், பயிற்சி மையத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் உள்ளிட்டோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவக்குழுவுடன் சிறுவன் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர். மேலும் சிறுவன் உயிருக்கு ஆபத்தில்லை என்ற வார்த்தையைக் கேட்ட பிறகே செல்வோம் என்று கூறி அங்கேயே காத்திருக்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!