மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : டக்ளஸ் தேவானந்தா தீர்வு

கிளிநொச்சி, முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பிரதேசத்திற்கு நேற்று (30) விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் மக்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, கிளி முற்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய பாடசாலை சமூகத்தினர், பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், வீதி புனரமைப்பு மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர் செய்கைகளை பாதுகாப்பதற்கான மின்சார வேலி அமைத்தல், சீரான இணைய வசதிகளை பிரதேச மக்கள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அவை தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

அதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சர், புதிய வருடத் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற போது குறித்த பாடசாலைக்கு பொருத்தமான அதிபர் நியமிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!