கடனை திருப்பிச் செலுத்தும் கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை!

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால் பெரும் நிவாரணமாக அமையும் என்று சீன வெளிவிவகார அமைச்சரிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துளளார்.
    
சீன வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவத்துடன் வரவேற்ற ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்தார்.
கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் சீனாவிடமிருந்து கிடைத்த பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக, சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மீட்டிப்பார்த்த வாங் யீ அவர்கள், மீண்டும் இலங்கைக்கு வருகைதரக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், நெருக்கமான நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கு சைனோஃபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவுக்கும், ஜனாதிபதி சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை உயிர்க் குமிழிக்குள் மட்டுப்படுத்தி இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறு, வாங் யீயிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!