துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ: பிரித்தானிய ராணியார் எடுத்த அதிரடி முடிவு!

அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் பதவிகளை ராணியார் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்து பணிகளில் இனிமேல் ஈடுபட வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு எந்த புது பொறுப்புகளும் அளிக்கப்படமாட்டாது என்றே தெரிய வந்துள்ளது.

இனி அவர் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. இளவரசர் ஆண்ட்ரூ மேலும் தாமதிக்காமல் நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்திருந்த நிலையிலேயே ராணியார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

மட்டுமின்றி, பிரித்தானியாவில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சுமார் 154 பேர் ராணியாருக்கு இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அரச குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து ராணுவ பதவிகளும் பறிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Virginia Giuffre என்பவர் தமக்கு 17 வயதாக இருக்கும் போது மூன்று சந்திப்புகளில் இளவரசர் ஆண்ட்ரூ உடன் உறவில் ஈடுபட தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ குறித்த குற்றச்சாட்டுகளை இதுவரை மறுத்தே வந்துள்ளார். இந்த வழக்கு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ இதன் விசாரணையின் போது இதுவரை நீதிமன்றத்தில் பங்கேற்றதும் இல்லை. இப்படியான சூழலில் இளவரசர் ஆண்ட்ரூ மீது ராணியார் கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!