இலங்கையின் பலமிக்க அரசியல் கட்சியில் ஏற்படப் போகும் பிளவு: அரசியல் அணி மாறல்கள் ஆரம்பம்

இலங்கையின் பலம் வாய்ந்த பிரதான அரசியல் கட்சி ஒன்று பிளவுப்பட்டு செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல் கட்சி மூன்று அணிகளாக பிரிந்து செல்லும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் கட்சித் தலைவருடன் ஒரு அணியும் எதிர்க்கட்சியுடன் மற்றுமொரு அணியும் இணைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மூன்றாவது அணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகி வருகிறது.

குறித்த அரசியல் கட்சியின் அங்கம் வகிக்கும் ஐந்து அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியுடன் இணையும் நோக்கில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். மிக விரைவில் இந்த அரசியல் கட்சி பிளவுப்படும் சம்பவம் நிகழும் என அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரதான அரசியல் கட்சி பிளவுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையில், தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்கள் காணப்படாத நிலைமையிலும் அரசியல் அணி மாறல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மேலும் சில செய்திகள் கூறுகின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்சி தாவ தயாராகி வருகிறார். இந்த ராஜாங்க அமைச்சர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இந்த அரசியல்வாதிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக அவர் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மீண்டும் உயிரூட்டப்பட உள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைவதற்காக நாட்டின் பிரதான அரசியல் கட்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள், அந்த கட்சியில் இருந்து விலக தயாராகி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்த அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மாத்திரமல்லாது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இந்த புதிய அரசியல் வேலைத்திட்டத்தில் இணையவுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சிலர் மாத்திரமல்லாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தரப்பினரும் மீள் உருவாக்கம் செய்யப்படும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அரசியல் களத்தில் நிலையற்ற நிலைமை உருவாகி வரும் நிலையில், திரைக்கு பின்னால் அரசியல் சூடிப்பிடித்து வரும் சூழலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்றை உருவாக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார்.

இந்த புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக நாட்டின் பிரதான இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகள் பலவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் தமது கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தி இருந்தார்.

கடந்த கால தேர்தல்களில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கம் செய்ய போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியிருந்த பின்னணியில், மைத்திரிபால சிறிசேன இந்த புதிய அரசியல் கூட்டணி தொடர்பான மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!