வடக்கில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    
கடந்த இரண்டு வாரங்களில் 4 கோவிட் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாடு பூராகவும் கோவிட் அதிகரிப்பு காணப்படுகின்றது. அதேபோல் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் நேற்றுமுன்தினம் வரை வடக்கு மாகாணத்தில் 726 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 10 பேர் மட்டும் இனங்காணப்பட்டுவந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்குத் தினமும் 60 தொடக்கம் 70 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங் காணப்படுகின்றார்கள். ஒமிக்ரோன் நோயானது உலக நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் எங்களுடைய நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலும் மேலும் பல மாகாணங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றது. ஆகவே பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள இருக்கின்ற ஒரே ஒரு பாதுகாப்பான விடயம் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதுதான்.

முதல் இரண்டு தடுப்பூசியினை பலரும் பெற்ற போதிலும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியினை பெறாமையின் காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அற்ற நிலையில் வேகமாக கோவிட் நோய் தொற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது.

எனவே தற்பொழுது நாடு பூராகவும் நிறைவேறும் குணா நோய் தாக்கத்திலிருந்து வடக்கு மாகாண மக்கள் தங்களை நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியினை கட்டாயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!