தொற்று தீவிரம் – சுகாதார வழிகாட்டல்களை திருத்துகிறது அரசு!

நாட்டில் கெரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது
    
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பெரும்பான்மையான மக்கள் சுகாதார விதிமுறைகளை கவனமாகக் கடைப்பிடித்தாலும், சிலர் இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் எனவும் இது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டுமோர் உயர்வுக்கு வழிவகுக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்றைய அவர்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என்பதால், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டை மூடவேண்டிய நிலை ஏற்பட்டால், மாதாந்த சம்பளம் பெறுவோருக்கு அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நிலவும் பல்வேறு கட்டுக்கதைகளால் பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ள சிலர் தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது என்றும், இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், மரண எண்ணிக்கையும் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!