48 ஆயிரம் கோடியில் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி மத்திய பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றமக்களவையில் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (வரவு செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

    
இந்த பட்ஜெட் அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 4-வது பட்ஜெட்; காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவத்தில் தாக்கலான 2-வது பட்ஜெட் என்பது சிறப்பம்சம்.
வருமான வரி விலக்கு வரம்பிலோ, வருமான வரி விதிப்பு அடுக்குகளிலோ எந்த விதமான மாற்றத்தையும் இந்த பட்ஜெட்டில் செய்யவில்லை.

பெருந்தொற்றுக்கு மத்தியில் மீண்டெழும் திறன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியபோது கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரம் மீட்சி பெற்றிருப்பது, நமது நாட்டின் வலுவான மீண்டெழும் திறனை பிரதிபலிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் பிற பொருளாதார நாடுகளை விட அதிக அளவிலானது ஆகும்.
ஒமைக்ரான் அலைகளுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம், அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பாதிப்பு இருந்தாலும், நோய்த்தீவிரம் லேசான தாக்கத்தை கொண்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் காட்டுகிற வேகமும், பெரும்பாலானோரை தடுப்பூசி சென்றடைந்துள்ளதும் பெரிதும் உதவி உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு
கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புகள் அதிவேக முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே சவால்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் நாம் இருக்கிறோம்.
நாம் ஆசாதி கா அம்ரித் மகோத்சவை (சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா) கொண்டாடி வருகிறோம். நூற்றாண்டை நோக்கி அடுத்த 25 ஆண்டுகளுக்குள் (அம்ரித் கால்) நுழைந்திருக்கிறோம். சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவுக்கான தனது தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொருளாதாரத்துக்கு அஸ்திவாரமாகவும், வரைபடமாகவும் அமையும்.
இவ்வாறு கூறிய நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நதிகள் இணைப்பு
அதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நதிகள் இணைப்பு திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், வெள்ள காலங்களில் கடலில் கலக்கிற உபரி நீரை நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட வழி பிறக்கும். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர், விவசாயத்துக்கு பாசன வசதி பெற முடியும். நீர்வழி போக்குவரத்து நடத்த முடியும். மீன்பிடி தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படும்.
* நதிகளை இணைக்கும் தேசிய முன்னோக்கு திட்டத்தின்கீழ் யமுனை நதியின் துணை நதிகளான கென்-பெட்வா நதிகள் ரூ.44 ஆயிரத்து 605 கோடியில் இணைக்கப்படும்.

இந்த நதிகள் இணைப்பினால் என்ன பலன் என்ற கேள்வி எழும். 9.08 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் கிடைக்கும். 103 மெகாவாட் நீர் மின்சக்தியும், 27 மெகாவாட் சூரிய மின்சக்தியும் உற்பத்தி செய்ய முடியும்.
* தமன்கங்கா-பிஞ்சல், பர்-தபிநர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி ஆகிய 5 நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட வரைவு அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் பலனடையும் மாநிலங்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட உடன் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.

60 லட்சம் பேருக்கு வேலை
பிற முக்கிய அறிவிப்புகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் முக்கிய இடம் பிடிக்கிறது.
சுய சார்பு திட்டத்தின் தொலைநோக்கு திட்டத்தை அடைவதற்கு 14 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை அமல்படுத்தியது சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும். மேலும் கூடுதலாக ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் உற்பத்தி ஏற்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

80 லட்சம் வீடுகள்
* பட்ஜெட்டின் அடுத்த முக்கிய அம்சம்: 2022-23 நிதி ஆண்டில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு) திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மத்திய அரசு நடுத்தர வர்க்கம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவு அடைந்தவர்களுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்குவதை மேம்படுத்துவதற்காக நிலம் மற்றும் கட்டுமானம் தொடர்பான அனைத்து ஒப்புதல்களுக்கு தேவைப்படுகிற நேரத்தை குறைக்கிற வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும். செலவைக் குறைப்பதோடு மூலதனத்துக்கான அணுகலை விரிவுபடுத்த நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவோம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற முக்கிய அறிவிப்புகள்
* நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது மேலும் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருக்கும்.
* ஸ்டார்ட்-அப் சமூகத்தினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் வரி 15 சதவீதமாக இருக்கும்.

* ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்படும். மாநிலங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநிலங்கள் பங்காளிகளாக மாறும்.

* நகர்ப்புற கொள்கைகள், திறன் மேம்பாடு, திட்டமிடல், திட்டங்களை செயல்படுத்துதல், நிர்வாகம் ஆகியவை தொடர்பாக பரிந்துரைகள் வழங்க புகழ்பெற்ற நகர்ப்புற திட்டமிடுவோர், பொருளாதார நிபுணர்கள், நிறுவனங்களை கொண்ட உயர் மட்டக்குழு அமைக்கப்படும்.
* சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், வெகுஜன போக்குவரத்து, நீர்வழிகள், தளவாடங்கள் ஆகிய 7 என்ஜின்களைக் கொண்ட தேசிய உள்கட்டமைப்பு முக்கிய திட்டங்கள் பிரதம மந்திரி கதிமாஸ்டர் திட்டத்தில் இணைக்கப்படுகிறது.

* மூலதன செலவினங்கள் 35.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ரூ.5.54 லட்சம் கோடியில் இருந்து, அடுத்த நிதி ஆண்டில் ரூ.7.50 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
* 2022-23 நிதி ஆண்டுக்கான மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக இருக்கும். கடன்கள் தவிர்த்து மொத்த வரவு ரூ.22.84 லட்சம் கோடியாக இருக்கும்.
இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

1½ மணி நேரம்
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை 1½ மணி நேரம் வாசித்தார். அவ்வப்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் இடையூறுகள் வந்தாலும், ஆளும்கட்சி தரப்பில் கைதட்டல்களுக்கு குறைவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!