தாய்லாந்து குகை மீட்பு பணிக்கு மினி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய எலான் மஸ்க்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் 3 பேரை மீட்க எலான் மஸ்க் சிறியரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அங்கு பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

எனவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் குகைக்குள் சிக்கி தவித்த இவர்கள் 16 நாட்களாக வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு குழுவுடன் இங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மாயமாகி 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் இருப்பதை 2 இங்கிலாந்து வீரர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. 18 நீர்மூழ்கி வீரர்கள் (டைவர்கள்) நியமிக்கப்பட்டனர். இதுவரை குகைக்களுள் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில் 3 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர்.

அவர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குகைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ‘பம்ப்’ மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்க சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி உதவுவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தாய்லாந்து சென்றடைந்தது.

“சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கிறது. ராக்கெட் பாகங்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது தேவைப்படும் என்பதால் இதனை இங்கேயே விட்டுச் செல்கிறேன். தாய்லாந்து மிகவும் அழகிய நாடு.” என எலான் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!