சுகாதார ஊழியர்கள் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    
தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இது தொடர் மேலும் கருத்து தெரிவித்த அவர், எங்களின் குறைகளைச் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்த போதிலும் அவர் எங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவாக, மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்ட 16 குழுக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை மட்டும் நிவர்த்தி செய்வதால் ஏற்படும் இணையான சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சிறப்புக் கடமைப் படியை ரூ.10,000 ஆக உயர்த்துதல் மற்றும் சுகாதாரத் தொழில்சார் சேவைகளை மூடிய சேவைகளாக மாற்றுதல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தத்தால் புற்றுநோய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி ஆகியவற்றின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!